இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடத்தொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அதில் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்ராசா மேலும் தெரிவித்ததாவது,
இன்றையதினம் இந்த ஊடக சந்திப்பினுடைய பிரதன நோக்கம், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் அம்மணி அவர்களுக்கு வடக்கு கடற்றொழில் சமூகத்தின் ஒரு வேண்டுகோள் ஒன்றினை நாம் இந்த ஊடக வாயிலாக முன் வைத்திருக்கின்றோம்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையிலே கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்று குறுகிய நிகழ்வு நிரலிலே இங்கு வருகை தந்திருக்கின்ற எங்களுடைய இந்தியாவினுடைய நிதி அமைச்சர் அவர்களுக்கு, வடக்கு கடற்றொழிலாளர்கள் தயவான ஒரு வேண்டுகோள். அதாவது இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற இலங்கையினுடைய கடற்றொழில் திணைக்களம் எங்களுடைய வளங்களும், வாழ்வாதாரங்களும், சீன நாட்டுக்கு விற்கப்பட்டு, எங்களுடைய இருப்பையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
இலங்கையின் கடற்றொழில் திணைக்களமும், சீன நாடும் சேர்ந்து, வடக்கு கடற்றொழிலாளர்களை கடலை விட்டு அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் எங்களுடைய நாட்டிலே எங்களுடைய கடலிலே குறிப்பாக வடகிழக்கு கடலிலே நாங்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு போக முடியாத நிலைக்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக இம்மாதம் ஆறாம் திகதி சீன நாட்டு தூதுவர் கூட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்கின்றார்.
எங்களுடைய பகுதியிலே எங்களுடைய மக்களுக்கு கிடைக்கின்ற புரத மீனை, அல்லது கடல் உணவை பிடிக்க கடத்தொழிலாளர் ஆகிய எங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இங்கே சீன நாட்டு கடலட்டை பண்ணைகளை உற்பத்தியாக்கி அதை சீன நாட்டில் இருப்பவர்களுக்கு உணவாக கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.
நாங்கள் அண்டையநாடு என்ற வகையிலே இந்திய அரசாங்கத்திடமும், பாரத பிரதமரிடமும் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றோம்.
வடக்கு கடற்பிரதேசத்திலே சீனாவின் ஆதிக்கம் இருக்கின்றது. சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி எங்களுடைய கடலில் நாங்கள் இறைமையுடன் வாழ்ந்து தொழில் செய்வதற்கு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றோம்.
அந்த கோரிக்கையை இன்றும் எங்களுடைய இந்தியாவினுடைய நிதி அமைச்சர் அம்மணி அவர்களுக்கு தயவான வேண்டுகோளாக நாங்கள் விடுகின்றோம்.
நீங்கள் எங்களுக்கு அண்டைய நாடு. எங்களுக்கு தொப்புள் கொடி உறவாக தமிழ்நாடு இருக்கின்றது. அந்த வகையிலே சீன நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.
அதேபோன்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் இடையிலே அல்லது தமிழ்நாட்டிற்கும் வட கிழக்குக்கும் இடையிலே இருக்கக்கூடிய தொப்புள் கொடி உறவுக்கு தடையாக இருக்கின்ற தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட இந்திய இழுவை படகுகளினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
வடக்கு கடற்தொழிலாளர்களை, எங்களுடைய வாழ்வாதாரம், அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அந்த நடவடிக்கை என்பது 2016 ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் திகதி டில்லியிலே மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய வெளி விவகார அமைச்சு மட்டத்திலே எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் அந்த இழுவைமடி தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே முன்கொண்டு செல்லப்பட்டு இந்த இழுவைமடி இந்திய படகுகளினால் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் அழிக்கப்படுவதை நிறுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று பல உதவிகளுக்காக இந்தியாவிடம் கோரிக்கை விட்டிருந்தோம். கடற்றொழிலாளர்களுக்கு அந்த கோரிக்கைகள் இதுவரையும் சாதகமாக பரிசீலிக்கப்படவில்லையா என்கின்ற கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.
இந்த 2500 தமிழ்நாட்டு இழுவை மடி படகுகளின் ஆதிக்கம் வடக்கு கடலில் அதிகரிப்பதனால் தான் கடற்றொழில் திணைக்களம் சீன நாட்டை கொண்டு வந்து இறக்குகிறது.
அதாவது தமிழ்நாட்டு கடற்றொலாளர்களுக்கும், வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது என்று அரசாங்கமும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மீனவர்களை அந்த பக்கம் திசையை திருப்பி விட்டு மறுபுறத்திலே சீனாவைக் கொண்டு வந்து எங்களுடைய முற்றத்திலே நிறுத்துகின்ற செயற்பாட்டை மேற்கொள்கிறார்கள்.
இந்த சீன நாடு எங்களுடைய பகுதிக்கு நுழைவதற்கும், அந்த 2500 இந்தியன் இழுவைப் படகுகள் எங்களுடைய கடற்பகுதிக்கு வருவது தான் காரணமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.
எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவை மடி தொழிலாளர்களே உங்களுடைய இந்த 2500 இழுவை மடி படகுகளையும் நீங்கள் நிறுத்தி வடக்கு கிழக்கு கடத்தொழிலாளர்களை இலங்கை சீன ஆதிக்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நீங்கள் மாற்று தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்று தொப்புள் கொடி உறவு என்ற ரீதியிலே நாங்கள் தமிழ்நாட்டு இழுவை மடி மீனவர்களை தயவாக வேண்டி நிற்கின்றோம் – என்றார்.