சீன விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்
மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தனது நிகழ்வுகளை நிறைவுசெய்து கொண்டு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) இரவு இலங்கை திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை (14) பிரதமர் பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயம், கட்சியின் வரலாற்றுப் பயணம் உள்ளிட்ட சீனாவின் பல தசாப்த கால சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அவருக்கு ஓர் வாய்ப்பாக அமைந்தது.
அருங்காட்சியக விஜயத்தைத் தொடர்ந்து, பிரதமர் பீஜிங்கில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அங்கே, Huawei Technologies பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், இலங்கையின் கல்வித் துறைக்கான சாத்தியமான பயன்பாடுகளைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துரைத்ததுடன், ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) பற்றிய அவர்களது கருத்துப்படிவத்தினையும் (Concept Paper) சமர்ப்பித்தனர்.
பீஜிங்கில் தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளை நிறைவு செய்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்பினார்.





