Welcome to Jettamil

சுபீட்சமான இலங்கைக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Share

சுபீட்சமான இலங்கைக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (ஒக்டோபர் 17, 2025) புதுடில்லியில் நடைபெற்ற “NDTV உலக உச்சி மாநாடு 2025” இல் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய போதே இந்தக் கருத்தை வெளியிட்டார். “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான மக்களின் கோரிக்கையின் பேரிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது ஒரு திருப்புமுனையாகும் என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு, சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை பிரதமர் எடுத்துரைத்தார்.

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோதெல்லாம் அண்டை நாடாக இந்தியா வழங்கிய ஆதரவை மிகவும் மதிப்பதாகவும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முக்கிய ஆதரவும், எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பாராட்டப்பட வேண்டியது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை பெறுமான சங்கிலிகளுடன் இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்துக் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் GovPay, e-அடையாள முறைமைகள் போன்ற பல முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதை எடுத்துரைத்த அவர், ஒரு நல்ல சமூகத்தையும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதற்குப் பெறுமானங்களும் சமூக நெறிமுறைகளும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், இதற்காகச் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது உரையில் உறுதிப்படுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை