ஐரோப்பாவாக மாறிவரும் இலங்கை – இலங்கையிலும் ஆரம்பிக்கும் உறைபனி
இலங்கையின் “லிட்டில் இங்கிலாந்து” என அழைக்கப்படும் நுவரெலியாவில் இன்று (17) அதிகாலை சில பகுதிகளில் துகள் உறைபனி (Frost) பொழிவுடன் கூடிய விசேட காலநிலை நிலவியுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் புல்வெளிகள், பூந்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பனி துகள்கள் படர்ந்து காணப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பனி பொழிவு பதிவாகும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே நகரப் பகுதி, தாவரவியல் பூங்கா மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள், கிரகரி வாவி கரையோரப் பகுதிகள், பூந்தோட்டங்கள், தேயிலைச் செடிகள், அலங்கார மரங்கள் மற்றும் நீண்ட மரக்கறி பயிர் நிலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஐஸ் துகள்கள் அதிகமாக படர்ந்து காணப்பட்டன.
இதனால், சுற்றுப்புறம் முழுவதும் வெள்ளை நிறத்தில் அலங்கரித்ததுபோல் காணப்பட்டு, பார்வையாளர்களின் கண்களை வசீகரிக்கும் காட்சிகளை உருவாக்கியுள்ளது.
இந்த மாறுபட்ட காலநிலை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக நுவரெலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பனிபொழிவு காரணமாக தேயிலை, மரக்கறி மற்றும் மலர் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.





