Saturday, Feb 8, 2025

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையில் சதித்திட்டம் உள்ளது என்கிறார் ஸ்டாலின்

By Jet Tamil

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.கவினர் திடீரென்று நாடாளுமன்றத்தைக் கூட்டப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இன்றைக்கு எதற்காக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்‘ என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த ஒரே நாடு – ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவுக்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரைத் தலைவராக போட்டிருக்கிறார்கள்.

இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையிலும் தலையிடுவது அவருக்கு நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார்.

ஆனால் அதை எல்லாம் இன்றைக்குக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கிறீர்கள். அப்படி நாடாளுமன்றத்தோடு சட்டமன்றங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்காவது ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை வராமல் போய்விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை அந்தத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப் போகிறீர்களா? எனவே இப்படி ஒரு கேவலமான சதித் திட்டத்தைத் தீட்டி, எனவே ஒரு அதிபராகத் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தேர்தல் செலவை மிச்சப்படுத்த வேண்டும், குறைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவைக் குறைக்கிறீர்களோ, இல்லையோ, நீங்கள் கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு