அமெரிக்காவில் விருது வென்ற மன்னாரைச் சேர்ந்த தமிழ் சிறுமி!
மன்னார் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச குறுந்திரைப்பட விழா ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளம் தமிழ் சிறுமி ஒருவர் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
மன்னார், ஓலைத்தொடுவாய், சின்ன கரிசலைச் சேர்ந்த ரஞ்சித் குருஸ் சுவேதா என்ற சிறுமியே இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற “International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழாவில், சுவேதா “சிறந்த தனிநடிப்பு” (Best Monologue) என்ற விருதை வென்றுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” என்ற குறுந்திரைப்படத்தில் இவர் முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
உயிர்மாய்த்துக் கொள்வது ஒரு தீர்வாகாது என்ற முக்கிய மையக்கருவைச் சுமந்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், இதற்கு முன்னரும் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அரங்கில், சினிமாத் துறையில், ஒரு தமிழ்ச் சிறுமி சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்றுள்ளமை, வடக்கு மாகாண இளம் கலைஞர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தச் செய்தியானது மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்குப் பெருமையைச் சேர்த்துள்ளது.





