யாழ்ப்பாணம், மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபியில், திலீபனின் 35 ஆவது நினைவேந்தலை ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கிச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆராயும், கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயத் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த விசேட கலந்துரையாடல் இன்று யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மேற்படி தரப்பினர் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் தொடக்க நாளன்று, இடம்பெற்ற விரும்பத் தகாத சம்பவங்களை அடுத்து, நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் செய்யவேண்டாம் என்று பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.