பருத்தித்துறையில் ஸ்தம்பித்த போக்குவரத்து! – ஜனாதிபதி நிகழ்வுக்கு பேருந்துகள் சென்றதால் பயணிகள் அவதி
யாழ்ப்பாணத்தில் நேற்று (16.01.2026) நடைபெற்ற ஜனாதிபதியின் தேசிய வீடமைப்புத் திட்ட ஆரம்ப நிகழ்விற்காகப் பருத்தித்துறை பேருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமையால், வடமராட்சிப் பகுதிப் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பருத்தித்துறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்துப் பேருந்துகளும் நேற்று காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டு, ஜனாதிபதி நிகழ்விற்கான ஆட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டன.
முறையான அறிவிப்பின்றிச் சேவைகள் நிறுத்தப்பட்டதால், பணிக்குச் செல்வோர் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காகப் பயணிப்போர் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
குறிப்பாகப் பருத்தித்துறையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் பிற்பகல் 6:15 பேருந்து, நீண்டகாலமாகப் பிந்தியே புறப்படுவதால் வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவனிடம் பலமுறை முறைப்பாடுகள் அளிக்கப்பட்டும், இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தைப்பொங்கல் தினத்திலும் இச்சாலை தனது சேவைகளை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




