நுவரெலியாவில் மரக்கறி விலை கடும் வீழ்ச்சி! அழுகும் நிலையில் பொருட்கள் – விவசாயிகள் கவலை!
நாட்டின் பிரதான மரக்கறி உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றான நுவரெலியாவில், கடந்த சில நாட்களாகக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் அளவு அதிகரித்ததன் காரணமாக அவற்றின் மொத்த விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, கரட், போஞ்சி உள்ளிட்ட பெரும்பாலான மரக்கறிகளின் விலை மிக அதிகமாகக் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குக் கூடுதலாக மரக்கறிகள் குவிந்துள்ளதால் விற்பனை குறைந்து, பொருட்கள் தேங்கிக் கிடந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாவனைக்கு உதவாத அழுகிய நிலையில் உள்ள மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு முன் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அப்புறப்படுத்துவதில் நகரசபை ஊழியர்கள் உட்படப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த அழுகிய மரக்கறிகள் காலை நேரங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாகி வரும் நிலையும் அதிகரித்துள்ளது.
மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால், நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாயிகள் விவசாயச் செய்கைகளைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரிய முதலீட்டுடன் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள், சந்தைப் பெறுமதி குறைவடைந்ததால் தாம் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.





