கில்மிஷாவின் வெற்றியை கொண்டாடிய ஊர் மக்கள்
யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள், ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் இவர் கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டியானது இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பங்கேற்ற குழந்தைகள் தமது திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.
17.12.2023 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதிச்சுற்றில் பங்குபற்றினர்.
இறுதியில் யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
இதன் நடுவர்களாக தென்னிந்திய பாடகர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 17.12 அன்று மாலை நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்றது.