வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை: பாதாள உலக ‘ஹரக் கட்டா’, ‘மிதிகம ருவான்’ தொடர்பு அம்பலம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (‘மிதிகம லசா’) நேற்று (ஒக்டோபர் 22) காலை 10.20 மணியளவில் பிரதேச சபை அலுவலகத்திலேயே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தினால், பாதாள உலகக் குழுக்களின் கொலைகள் குறித்த பேச்சு மீண்டும் சமூகத்தில் எழுந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த விதம்:
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து, மக்களுடன் காத்திருந்துள்ளார்.
பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து கடிதத்தில் கையெழுத்துப் பெற்று வெளியேறிய வேளையில், அந்தத் துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்து, கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி நான்கு குண்டுகளைச் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற காட்சி சிசிரிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதாள உலகத் தொடர்புகள்:
லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன், அவரது பாதாள உலகத் தொடர்புகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன:
இவர் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், தற்போது சிறையில் உள்ள ‘ஹரக் கட்டா’ (நதுன் சிந்தக) உடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
மேலும், ஹரக் கட்டாவின் கும்பலின் தலைவர்களான ‘மிதிகம சூட்டி’ மற்றும் ‘மிதிகம ருவானுடனும்’ அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை மிரட்டலும் உயிரிழப்பும்:
பின்னர், மிதிகம ருவான் அந்தக் குழுவிலிருந்து பிரிந்ததன் பின்னர், அவரால் லசந்த விக்ரமசேகரவுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறையில் இருக்கும் மிதிகம ருவான், “நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தை அணிந்துள்ளீர்கள். நீங்கள் கருப்பு நிறத்தில் அணிந்திருந்த போது நாங்கள் அனைவரும் ஒரே படகில் பயணித்தோம் என்பதை மறக்காதீர்கள்” என்று ஆரம்பிக்கும் ஒரு மிரட்டல் பதிவை முகநூலில் இட்டிருந்தார்.
இந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “பல பெரிய பாதாள உலகக் கும்பல்கள் என்னை மிரட்டியுள்ளன… எனது உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணர்கிறேன்… உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
ஆனாலும், அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட நேரத்தில் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் மிதிகம ருவானின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அரசியல் மட்டத்தில் கருத்துக்கள்:
சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர், பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என நாடாளுமன்றில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளினாலேயே இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை” எனப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, “தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரானாலும் அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என்று உறுதியளித்தார்.
இப்படுகொலை தொடர்பாகத் தகவலறிந்த எவரும் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.





