கனடாவில் ஈரானிய எழுச்சிக்கு ஆதரவாகத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில், ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான கனடியர்கள் வீதியில் திரண்டனர். நேற்றைய தினம் (ஜனவரி 10, 2026) நடைபெற்ற இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதியான யோங் ஸ்ட்ரீட்டை (Yonge Street) ஈரானின் தேசியக் கொடிகளால் வர்ணமயமாகியது.
வாழ்க்கை, சுதந்திரம்” மற்றும் ஜனநாயக மாற்றத்தை வலியுறுத்தி இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஈரானின் கொடிகளை ஏந்தியவாறு, கடும் குளிரையும் பொருட்படுத்தாது முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இந்தப் பிரம்மாண்ட பேரணியில் இணைந்துகொண்டனர்.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தற்பொழுது அங்கு மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கு இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் குரல்களை உலகிற்கு உரக்கச் சொல்லவே இவ்வாறான சர்வதேசப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.





