மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை!
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையானது (CEB), கட்டணத் திருத்தம் தொடர்பான முறையான முன்மொழிவை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கத் தவறியதே இந்தத் தீர்மானத்திற்குக் காரணமாகும்.
இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
2026 முதல் காலாண்டிற்கான முன்மொழிவை 2025 நவம்பர் 14-ம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால், மின்சார சபை டிசம்பர் 29-ம் திகதியே அதனைச் சமர்ப்பித்தது.
சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திலும் பல குறைபாடுகள் காணப்பட்டதால், அதனைத் திருத்தி ஜனவரி 8-ம் திகதிக்குள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், இன்றுவரை முறையான திருத்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
காலாண்டின் எஞ்சியுள்ள குறுகிய காலத்திற்குள் கட்டண மாற்றத்தைச் நடைமுறைப்படுத்துவது, அதிக சதவீத விலையேற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். இது தேசிய பொருளாதாரத்தில் தேவையற்ற எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது.
தற்போதைய நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாத போதிலும், அடுத்த காலாண்டிற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
“2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.”





