சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்: பேரே வாவியைத் தூய்மைப்படுத்தப் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!
கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேரே வாவியைத் (Beira Lake) தூய்மைப்படுத்தும் நோக்கில், சூரிய சக்தியில் இயங்கும் நவீன கழிவு அகற்றும் படகுகள் இன்று (19.01.2026) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
“Clean Waterways – Beira Lake” திட்டத்தின் கீழ் மேல் மாகாண சபை, HSBC வங்கி, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC) மற்றும் Clean Ocean Force Lanka ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்தப் படகுகள் முழுமையாகச் சூரிய சக்தியில் (Solar Power) இயங்குவதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் வாவியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றும் திறன் கொண்டவை.
கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓ’மஹோனி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கொழும்பு நகரை ஒரு பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில், நீர்நிலைகளை நிலையான முறையில் பராமரிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.





