இலங்கைக்கு எதிரான முதலாவது 20 – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஆட்டம் நேற்றிரவு, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
தனுஷ்க குணதிலகவின் 26 ஓட்டங்கள் மூலம் இலங்கை அணி வேகமாக தொடக்கத்தை பதிவு செய்தது.
பின்னர் பதும் நிஸங்கவின் 36, சரித் அஸலங்க பெற்ற 38 ஓட்டங்கள் மூலம் பலமான நிலையை எட்டியது.
எனினும், ஹேசில்வூட் வீசிய 14ஆவது ஓவரில் குசல் மென்டிஸ், பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக ஆகியோரை இழந்து இலங்கை அணி தடுமாறியது.
தொடர்ந்து அஸலங்கவும், சாமிக கருணாரத்னவும் ரண் அவுட்டாக, துஷ்மந்த சமீர, 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே இலங்கை அணி பெற்றது.
129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோணரின் ஆட்டமிழக்காத 70 , பின்ஞ்சின் ஆட்டமிழக்காத 61 ஓட்டங்களுடன், 14 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஜொஷ் ஹேசில்வூட் தெரிவானார்.