பிரித்தானியாவில் கொடூரம்: 9 வயது சிறுமி குத்திக் கொலை! – 15 வயது சிறுவன் கைது!
பிரித்தானியாவின் சமர்செட் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6:10 மணியளவில் வெஸ்டன்-சூப்பர்-மேர் பகுதியிலுள்ள லைம் குளோஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 9 வயதான ஆரியா தோர்ப் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, சிறுமியின் உடலில் ஏற்பட்ட ஒற்றைக் கத்திக் குத்து காயமே மரணத்திற்கு முதன்மைக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வோர்லே எனும் பகுதியில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் சம்பவ தினமே கைது செய்தனர்.
குறித்த சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நேற்று முன்தினம் பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
சந்தேக நபர் தொடர்ந்து சிறார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 2026 மார்ச் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உயிரிழந்த சிறுமி ஆரியாவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அவள் ஒரு அழகான தேவதை , மகிழ்ச்சியானவள் மற்றும் பிறர் முகத்தில் எப்போதும் சிரிப்பை வரவழைப்பவள்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





