அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புகளை, மீறும் வகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐரோப்பாவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐ.நா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை ரஷ்யா வெட்கமின்றி மீறியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றன.
அதனால் தான் ஐ.நா. பொதுச்சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கின்றன” என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, ரஷ்யா, உக்ரேனியப் போருக்காகப் படை திரட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புதிய தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் இதுகுறித்து கூடிப் பேசியுள்ளனர். அவசரகால அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறுதி முடிவு அதிகாரபூர்வக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் (Josep Borrell) தெரிவித்தார்.