ரணில் விக்ரமசிங்கவிற்கு சிகிச்சையளித்த 5 வைத்தியர்களிடம் CID விசாரணை
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, தனது இங்கிலாந்து விஜயத்தின் நிமித்தம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்குத் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக, அவருக்கு சிகிச்சையளித்த ஐந்து விசேட வைத்தியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வரவழைத்து, அவரது உடல்நிலை மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





