கச்சதீவை மீளப் பெறுவது குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், பேசிஉள்ளார் என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவல் சமீபத்தில் இலங்கைக்கு இரகசியமாக சென்று வந்துள்ளதாகவும் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அஜித் டோவல் கொழும்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், கச்சத்தீவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், கச்சதீவை மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, பேசியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில், 99 ஆண்டுகளுக்கு கச்சதீவை இந்தியா குத்தகைக்கு எடுக்கலாம்; அதற்கு இந்திய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுடன், இலங்கை நாடாளுமன்றமும் அதனை ஆமோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் கச்சதீவு இந்தியாவிற்கு கிடைத்து விடும் என்றும், பா.ஜ.க மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.