தங்காலை கடலில் மிதந்து கொண்டிருந்த போதைப்பொருள்…
இலங்கையின் தெற்குக் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகளை இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் இருந்தன.
கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்): சுமார் 670 கிலோ 676 கிராம், ஹெரோயின் 156 கிலோ 542 கிராம், ஹஷிஷ் சுமார் 12 கிலோ 036 கிராம் இந்த மொத்த போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைக்காக தங்காலை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடல் வழியாக இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையினரால் பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் இவற்றை கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த பிரம்மாண்ட போதைப்பொருள் தொகையை நேரில் பார்வையிடுவதற்காக, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் தங்காலைத் துறைமுகத்திற்குச் சென்றிருந்தனர்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, “நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், ‘போதைப்பொருள் இல்லாத நாடு’ என்ற இலக்கை அடைய பாதுகாப்புப் படையினரால் நாடளாவிய ரீதியில் பல விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை அமுல்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் போதைப்பொருள் வேட்டையை வெற்றிகரமாகச் செய்ய முடிகிறது.
இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் பெரும் பலமாக உள்ளன. ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





