மத்திய பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வீதிகளுக்கு ஓடினர். மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது.
சேதமும் மீட்பு நடவடிக்கைகளும்
நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமானதோடு, சாலைகளில் பள்ளங்களும் ஏற்பட்டு பெரும் சேதம் விளைந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி மொத்தம் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினரும் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
பீதியில் மக்கள் இடம்பெயர்வு
நிலநடுக்கம் பதிவான செபு நகரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கப் பீதியில் உறைந்துள்ள அவர்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கிப் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
மேலும், நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள் (aftershocks) நிகழ வாய்ப்புள்ளதால், மக்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நகர நிலநடுக்கவியல் மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.





