இயக்குனராக வலம் வந்த மாரிமுத்து, மிஸ்கின் இயக்கத்தில் வெளியாவந்த யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
பல படங்களில் நடித்து வந்த இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானார்.
எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக டப்பிங் அறையில் இருந்து வெளிய வந்த மாரிமுத்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் அவருடைய மகளை தொடர்பு கொண்டதன் பிறகு தான் விவரம் என்னவென்று தெரிந்தது என எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் தம்பியாக நடித்து வரும் நடிகர் கமலேஷ் கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் திருச்செல்வம் கூறுகையில் :
“நடிகர் மாரிமுத்து மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. நாங்கள் இன்று சீரியல் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக கூறியிருந்தார்”.
“ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. இது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கே இழப்பாகும்.
அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார்” என பேசியுள்ளார்.
சினிமாவிற்காக சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த மாரிமுத்து தனது இறுதி நிமிடங்களை கூட சினிமாவிற்காகவே செலவளித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாரிமுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
திருமணமாகி 27 வருடங்களாக வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். இப்போது நான் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளேன்.
சொந்த வீடு என்பது அது ஒரு கனவு மாதிரி, மற்ற ஊரில் இருந்து சென்னையில் வந்து வாழ்பவர்களுக்கு சொந்த வீடு கனவு போன்று தான் இருக்கும்.
என்னுடைய கனவு நிறைவேறி விட்டது. தற்போது மணப்பாக்கம் பக்கத்தில் வீடு வாங்கி இருக்கிறேன்.
அந்த வீட்டிற்கு என்னுடைய மனைவி பெயரை வைத்துள்ளேன் என்று மாரிமுத்து கூறியுள்ளார்.
இப்படி ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குள் அவர் செல்ல முடியாமல் போனது அனைவர்க்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.