முன்னாள் விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த பருவத்தில் உற்பத்தி 10% குறைக்கப்பட்ட போதிலும் 50% குறைந்துள்ளதாக சபையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபத்திய காலங்களில் கோவிட் தொற்றுநோய் மிகக் கடுமையாக பரவியிருந்த காலகட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தபோதிலும் கூட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிற் துறையில் ஈடுபடுபவர்களால் தங்கள் வணிக செயற்பாடுகளை பராமரிக்க முடிந்தது.
எவ்வாறாயினும்,அரசாங்கம் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த வர்த்தகங்கள் இன்று பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது தொடர்பாக நான் 22.09.2021 ஆந் திகதி நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன்.
எவ்வாறாயினும்,அப்போதைய அரசாங்கமோ அல்லது தற்போதைய அரசாங்கமோ அந்தக் கேள்விக்கு இதுவரை உறுதியான பதிலை வழங்கவில்லை. இன்று குறித்த இந்தத் துறைகள் எதிர்கொண்டு வரும் முக்கிய நெருக்கடிகளாக, பெற்ற வங்கிக் கடன் தவணைகள்,குத்தகைத் தவணைகளைச் செலுத்த இயலாமை உட்பட டொலர் தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழில் துறைகளை கொண்டு நடத்தத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை போன்றன காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, தற்போதுள்ள மின்சார நெருக்கடி காரணமாக இயங்கு நிலை கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.