காசா போர் பதற்றம்: இஸ்ரேலுக்கு எதிராகப் பிரித்தானியா தடை
காசா பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிய மாணவர்கள் லண்டனில் உள்ள பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர்வதற்குப் பிரித்தானியா தடை விதித்துள்ளது.
பிரித்தானியா நீண்டகாலமாக இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருந்தாலும், காசா போர் தொடர்பாக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகிறது. இந்தத் தடையானது, வரும் கல்வியாண்டில் இஸ்ரேலிய மாணவர்கள் றோயல் பாதுகாப்புக் கல்லூரியில் சேர முடியாது என்பதைக் குறிக்கிறது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதல்கள் குறைக்கப்படாவிட்டால், பாலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரித்தானியா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காசா நகரை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டதாக அறிவித்த நிலையில், பிரித்தானியாவின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன், காசாவில் தாக்குதலை அதிகரிப்பது தவறான முடிவு எனப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் காசா தொடர்பான விவகாரத்தால், பிரித்தானியா தனது பெரிய ஆயுதக் கண்காட்சியில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்திருந்தது. ஆயினும், இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அத்தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருந்தது.





