இன்று GIT பரீட்சை! : நாளை முதல் உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் ஆரம்பம்!
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இன்று (11.01.2026) நாடு தழுவிய ரீதியில் பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இடம்பெறுவதுடன், நாளை முதல் உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் மீண்டும் தொடங்கவுள்ளன.
இன்றைய தினப் பரீட்சையில் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 303 (198,303) மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 1,665 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது.
‘டித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய 10 பாடங்களுக்கான தேர்வுகள் நாளை (12 ஆம் திகதி, திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.
நாளை தொடங்கும் இந்தப் பரீட்சைகள் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
மொத்தம் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் இடம்பெறும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வானிலை சீராகி வரும் நிலையில், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.





