செம்மணி நீதிமன்ற விசாரணைக்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு
செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி அகழ்வுப் பணிகளில், பிஞ்சு குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட 38 மனித எலும்புக் கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 34 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கொடூரமான சம்பவம் மீண்டும் இலங்கையின் போர்க்குற்றங்கள், தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட இன அழிவு, மற்றும் காணாமல் போனோர் விவகாரம் ஆகியவற்றை உலகமே பார்வையிட வைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் முழுமையான ஒத்துழைப்பை உறுதிசெய்துள்ளார் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ. ஜூலை 2ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
“செம்மணி வழக்கு தொடர்பான தகவல்கள் CID-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற விசாரணைகள் தொடங்கிவிட்டன. அதனால் மேலதிக கருத்துகளை வெளியிட முடியாது. ஆனால் அரசாங்கத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்,” என அவர் கூறினார்.
இந்த மனித புதைக்குழி தொடர்பான வழக்கு, ஜூன் 29 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சாட்சியங்களாக புத்தகப்பைகள், பொம்மைகள், சப்பாத்துகள் போன்றவற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் விவகாரமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசாங்கம் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.