தமிழர் இன அழிவுக்கான நியாயம் தேவை: மலையகத்தில் இருந்து எழுந்த குரல்
இலங்கை வடக்கில் உள்ள செம்மணி புதைக்குழி தொடர்பான சர்வதேச கவனத்தைத் தொடர்ந்து, மலையக தமிழர்களின் பக்கம் இருந்து ஒரு வலியுறுத்தலான கோரிக்கை வெளியாகியுள்ளது — “அரசியல் நாடகங்கள் வேண்டாம்; நிரந்தர தீர்வு வேண்டும்.”
இந்த கோரிக்கையை, நுவரெலியா மாவட்ட ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லதுர்ஷான் வெள்ளசாமி முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், “செம்மணி புதைக்குழி என்பது எமது இன அழிவுக்கான சாட்சியமாகவே இருந்துவருகிறது. இதை அரசியல் சாதனையாக மாற்றும் முயற்சிகள் முடிய வேண்டும். நாங்கள் எதிர்பார்ப்பது நியாயமான தீர்வு, உண்மை வெளிச்சம் மற்றும் மறுசேர்க்கை மட்டுமே,” என்றார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது, போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான எந்தவொரு வழக்கமான நீதியும் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால், தமிழ் மக்களுக்குள் நம்பிக்கையின் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், செம்மணி சம்பவம் ஒரு போர் குற்றத்தின் நினைவாகவும் மனித உரிமை மீறலுக்கான முக்கியமான ஆதாரமாகவும் மாறிவிட்டது எனக் கூறினார்.
அரசாங்கம் இந்த வழக்கில் வெளிப்படையான மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், செம்மணி சம்பவத்துக்கான நிரந்தர தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது மட்டுமல்லாமல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க, மலையக இளைஞர்கள் என்றும் குரல் கொடுப்போம் என அவர் உறுதியளித்தார்.