தலைநகர் கொழும்பிலும், நிர்வாகத் தலைநகர் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்திலும் உள்ள, பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், உயர்நீதிமன்ற வளாகம், மேல்நீதிமன்ற வளாகம் , கொழும்பு நீதிவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம்,
பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகள், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க உயர் பாதுகாப்பு வலய கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே தகுதியான அதிகாரியாக இருப்பார்.
உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பாதுகாப்பு சூழ்நிலையின் அடிப்படையில் அல்லது விசேட சந்தர்ப்பங்களின் போது, சில செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டாலன்றி, உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்துள்ள பிரதேசத்தில், வீதிகள், மைதானம், கரை அல்லது திறந்த வெளியில் பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர ஏனைய இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் பல வருடங்களுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.