இலங்கை அரசியலில் எந்தவொரு சர்வாதிகாரியும் நிரந்தரமாக இருந்தது கிடையாது. சட்டத்தை இயற்றுமிடம்தான் தற்போது இந்த நாட்டில் பிரச்சினையாகவுள்ளது – என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் நூலகமொன்றை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று உலகமே ஒரு சிறைச்சாலையாகத்தான் காணப்படுகின்றது. இந்த உலகில் வாழ்கின்ற போது மனிதன் மிகவும் நேர்த்தியாக வாழவேண்டும்.
இந்தப் போதைப்பொருள்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கின்றது? அதற்கு கல்விகற்றவர்களின் அறிவே பயன்படுகின்றது.
போதைப் பொருள் நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது யார்? அனுமதியை வழங்கி விட்டு எவ்வாறு குற்றச்செயலைத் தடுக்கமுடியும்.
இரண்டாவது உலகப்போரின்போது காயமடைந்த வீரர்கள் தமது காயத்தின் வலியை மறக்கக் கண்டுபிடிக்கப்பட்டதே ஐஸ் போதை. இன்று அது சமூகமெங்கும் பரவியிருக்கின்றது.
சிறைச்சாலையொன்றில் நூலகம் திறக்கப்படுவது சிறப்பானது.
சிறைச்சாலையில் புனர்வாழ்வு வழங்கப்படுகின்றது என்கிறார்கள். இந்தப் புனர்வாழ்வு கட்டாயத்தின் அடிப்படையில் வழங்கப்படக்கூடாது. குற்றம் செய்தவர்கள் தாமாக மனம்திருந்தி இந்தப் புனர்வாழ்வை அடைந்துகொள்ள வேண்டும்.
கைதிகளாக வருபவர்கள் தமது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி சிறந்த மனிதர்களாக உருவாக்க இந்த நூலகத் திட்டம் உதவும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், குற்றம் இழைக்காவிட்டாலும் குற்றமிழைக்க வைத்துவிடுவார்கள். இந்த நாட்டில் சட்டத்தை இயற்றுகின்ற இடம்தான் பிரச்சினையாகவுள்ளது.
நாடாளுமன் றத்தில் கட்சித்தாவல்கள்தான் இப்போது மிகையாகவுள்ளன. இதை நான் சொல்லவில்லை. அவர்களே சொல்லிக்கொள்கின்றார்கள் – என்றார்.