90 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு – முச்சக்கர வண்டியில் கடத்தல்!
நிட்டம்புவ பகுதியில் சுமார் 61 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (21.01.2026) கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்டவை: 61 கிலோ 838 கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள்.
இதன் சர்வதேச சந்தை பெறுமதி 900 மில்லியன் (90 கோடி) ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோணஹேன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நிட்டம்புவ – பின்னகொல்லவத்தை பகுதியில் இந்தச் சோதனையிடல் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘டுபாய் வருண’, ‘மொஹமட் சித்திக்’ மற்றும் சிறையிலுள்ள ‘லேனா’ ஆகியோரின் நெருங்கிய சகா என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




