விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம்! – தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை
நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்றும், விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துக்களில் கைவைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்:
விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின்படி, அவற்றுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் தங்க நகைகள் அந்தந்த மத ஸ்தலங்களுக்கே சொந்தமானவை. அவற்றில் தலையிட முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார். அந்நியர் ஆட்சிக் காலத்திலேயே மதிக்கப்பட்ட இந்த நடைமுறையிலிருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் விலகிச் செல்ல முடியாது.
மகா சங்கத்தினருடன் இணைந்து பௌத்த மதத்தைப் பாதுகாப்பது இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தார்மீகக் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.





