சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் பாரிய போராட்டம்
தையிட்டியில் பொதுமக்களின் பூர்வீகக் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக, இன்று காலை முதல் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தெற்கிலிருந்து புத்தர் சிலையைக் கொண்டு வந்து நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய போயா தினத்தில் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் போராட்டக் களத்தில் குவிந்துள்ளனர்.
விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகமடக்கும் பிரிவு மற்றும் நீர்த்தாரை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டம் தொடர்பாக 32 பேருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், நாளை வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இடைக்காலக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தடைகளையும் காவல்துறையின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, “வேண்டும் வேண்டும் பூர்வீக நிலம் வேண்டும்” என்ற கோஷங்களுடன் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டக் களத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். தையிட்டி பகுதியில் தற்போது கடும் பதற்றமான சூழல் நிலவுகிறது.





