Welcome to Jettamil

இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்

Share

பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்து கொள்வதற்கும், தீர்வை வழங்குவதற்குமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை விடுத்து, அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரங்களின்  மூலம் போராட்டங்கள் அடக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி கவலை வெளியிட்டுள்ளார்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி, துனிசியா, ஆர்மேனியா, இலங்கை மற்றும் சிம்பாப்பே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அந்தநாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராய்ந்து,  சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

 “ இலங்கையில் அமைதியான முறையிலான, சில ஒன்றுகூடல்களைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் மற்றும் அவர்களது அதிருப்தி என்னவென்பதை அறிந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நிறைவேற்று அதிகாரத்தின்  ஊடாக அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மீறும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கான பொறுப்புக்கூறல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவமான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், சிறந்த வேலைச்சூழல் மற்றும் கல்விக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கோரி அமைதியான முறையில் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதி வழியிலான ஒன்றுகூடல்கள் தொடர்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சட்டரீதியான தேவைப்பாடு சார்ந்த கொள்கைகள் மற்றும் அவசியத்தன்மை என்பவற்றுக்கு ஏற்புடையதாக அமைவது அவசியம் என்பதுடன், அவை வெறுமனே மேம்போக்காகப் பிரயோகிக்கப்படக் கூடாது.

இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பில், தெளிவானதும், சட்டத்திற்கு அமைவானதுமான வழிகாட்டல்களைத் தயாரிக்கவேண்டியது அவசியம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது சட்ட உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை இலக்குவைப்பதற்கும் கைதுசெய்வதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழிகாட்டல்கள் இலங்கையின் மனித உரிமைகள் சார் கடப்பாடு மேலும் மீறப்படுவதற்கு வழிவகுக்கும் என்பது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காகப் படையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவங்கள் விசனத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கமானது அர்த்தமுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதுடன், இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.” என்றும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை