சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண் கொலை: கண்டனப் பேரணிக்கு நீதிமன்றம் தடை!
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திட்டமிடப்பட்டிருந்த கண்டனப் பேரணிக்கு ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் பெண்ணின் கொலை தொடர்பில் நீதி கோரி, இன்று (ஒக்டோபர் 19) காரைநகர் பிரதேசசபை முன்பாக அமைதியான வழியில் கண்டனப் பேரணி ஒன்று நடைபெறவிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தடையுத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
புலன் விசாரணைக்கு பாதகம் ஏற்படும்!
சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகே சடலமாகக் கரையொதுங்கிய பிரதீபா சுரேஷ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருசில நாட்களிலேயே இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தக் கண்டனப் பேரணி இடம்பெறுவது, புலன் விசாரணைக்கு பாதகமாக அமையும் என்பதோடு, அப் பிரதேசத்தில் தேவையற்ற அமைதியின்மையையும் பதற்றத்தையும் தோற்றுவிக்கும் என நீதிமன்றம் கருதுயுள்ளது.
எனவே, புலன்விசாரணைகள் திருப்திகரமாக நடைபெற்று வரும் நிலையில், இவ்வாறான கண்டனப் பேரணி ஒன்று அவசியமற்றது எனக் கருதி, குறித்த பேரணியை உடனடியாகத் தடை செய்வதாக ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு வெளியாகியுள்ளது.






