வாடிக்கையாளர் போல் நடித்து தங்கச் சங்கிலியுடன் தப்பியோடிய மர்ம நபர் – CCTV காட்சிகள் வெளியீடு
ஹட்டன் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் நடித்து சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் நேற்று கடைக்குள் நுழைந்து, தனக்குத் தங்கச் சங்கிலி வேண்டும் எனக் கூறி பெண் ஊழியர்களிடம் நகைகளைப் பார்வையிட்டுள்ளார்.
ஊழியர்கள் பல சங்கிலிகளைக் காண்பித்தபோது, அதில் ஒரு சங்கிலியை மட்டும் கையில் எடுத்துக்கொண்ட அந்த நபர், யாரும் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடித் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் இடம்பெற்ற போது கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையன் நகையைத் திருடிக்கொண்டு தப்பியோடும் காட்சிகள் கடையில் உள்ள CCTV கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஹட்டன் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.




