பல கோடி ரூபா பெறுமதியான ‘கஜமுத்துக்களுடன்’ ஒருவர் கைது!
பல கோடி ரூபாய் பெறுமதியுடைய அரியவகை கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் ஒருவர் மஹியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 30 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்தக் கஜமுத்துக்களை 30 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர் நீண்ட காலமாக இந்தக் கஜமுத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் விசாரணையில் மேலும் வெளிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ளனர்.





