நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 23ம்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மழைக்காலத் தொடரில் அவை விதிகளை மீறி செயல்பட்டதாக மாநிலங்களவையை சேர்ந்த காங்கிரஸ், சிவசேனா உள்பட 12 எம்.பி.க்கள் குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவையைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையனும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் விவசாயிகள் போராட்டம் , லக்கிம்பூரில் வாகனம் ஏற்றி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம், குறைந்த பட்ச ஆதார விலை, எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டன.
சஸ்பெண்ட் செய்யப்பட்டப்பட்ட எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்தால் நடவடிக்கையை ரத்துச் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. கூச்சல் குழப்பம் நீடிப்பால் நாடாளுமன்றத்தின் இரு அவை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக இன்று இரு அவைத் தலைவர்களும் அறிவித்தனர்.
இதனை அடுத்து குளிர் கால கூட்டத் தொடர் ஒருநாளைக்கு முன்பு நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பெண்களின் திருமண வயது 21 ஆக அதிகரிப்பு, தேர்தல் சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.