25000 ரூபா மற்றும் 50000 ரூபா கொடுப்பனவு டிசம்பர் 31 இற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில், Rebuilding Sri Lanka திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்திலான மீளாய்வுக் கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான 25,000 ரூபா அரச மானியம் மற்றும் வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 50,000 ரூபா கொடுப்பனவு ஆகியவற்றை, தகுதியுடைய அனைவருக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக விதைகளை விநியோகித்தல், நீர்ப்பாசனத் திருத்தங்கள் மற்றும் கால்நடை பண்ணைகளுக்கான இழப்பீடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீள்குடியேற்றுவதுடன், அவர்களுக்கான முறையான வீடமைப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபா அரசாங்கக் கொடுப்பனவை விரைவாக விநியோகிக்கவும், அனர்த்தத்தின் போது காணாமல் போன கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான நடைமுறைகளை இலகுபடுத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எவரும் விடுபடாத வகையில் இழப்பீடுகளை வெளிப்படைத்தன்மையுடன் வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.





