தொல்பொருள் இனவாத விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர பகிரங்க எச்சரிக்கை
தொல்பொருள் விவகாரங்கள் மற்றும் மதத்தலங்களை மையமாக வைத்து நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்ட ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“வடக்கு, தெற்கு, கிழக்கு என நாட்டின் எந்தப் பகுதியிலும் மீண்டும் இனவாதம் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது. இதற்கான முழுமையான உத்தரவாதத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன்” என ஜனாதிபதி உறுதியளித்தார்.
சில சக்திகள் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மத ஸ்தலங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தத் துடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இனவாதத்தைப் போதிப்பதாகவோ அல்லது மக்களின் சொத்துக்களைத் திருடுவதாகவோ இருந்தால் மட்டுமே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடைவெளி ஏற்படும். ஆனால், இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் சகோதரத்துவத்துடனும், பொருளாதார ரீதியாக வலுவான மகிழ்ச்சியான வாழ்க்கையுடனும் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான 2,500 வீடுகள் உட்பட நாடு முழுவதும் 31,000-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டும் “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.




