பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன், கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, இதன் போது பிரதமர் ரணில் விளக்கிக் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் இராஜாங்க செயலாளர் பிளிங்கன் ஒப்புக்கொண்டார்.
இந்த சவாலான நேரத்தில், ஜனநாயக ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதில், அமெரிக்காவின் அர்ப்பணிப்பையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.