நாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு!
கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
| பிராந்தியம் | வானிலை |
| வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்கள் | இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். |
| நாட்டின் ஏனைய பிராந்தியங்கள் | பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். |
| பனி மூட்டம் | மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். |
காற்று மற்றும் கடற்பிராந்திய எச்சரிக்கை:
- பலத்த காற்று: மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்குச் சுமார் 30 – 40 கி.மீ. வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
- கடல் காற்று மற்றும் கொந்தளிப்பு:
- களுத்துறை தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கி.மீ இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
- நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான அறிவுறுத்தல்:
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொந்தளிப்பான கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்கள் செல்லும்போது அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.





