செம்மணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இரண்டாவது நாளாகப் போராட்டம்
யாழ்ப்பாணம்: வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள, சர்வதேச நீதியை வலியுறுத்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று (இரண்டாவது நாளாக) யாழ்ப்பாணம் செம்மணியில் தொடர்கிறது.
நேற்று செம்மணியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைபெற உள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த விவகாரங்களுக்கு நீதி கோரியும், உள்நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்தும், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும், அத்துடன் செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் போராளி ஒருவரான ஈஸ்வரன் அவர்கள் அஞ்சலி செலுத்தி, உண்ணாவிரதத்தை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.





