அதிர்ச்சித் தகவல்! பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல் காரணமாக மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டுப் பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
பயிற்சி முடிந்து உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த “கோழைத்தனமான தாக்குதலில்” மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் மரணத்திற்கு ACB தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக, அடுத்த மாதம் (நவம்பர் 17 முதல் 29 வரை) ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதிலும், பாகிஸ்தான் அதனை மீறி இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம், ஆப்கானிஸ்தான் சர்வதேச வீரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்சத்திர வீரர்களான ஃபஸல்ஹக் ஃபரூக்கி, முகமது நபி, ரசித் கான் ஆகியோர் இதற்குத் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





