Welcome to Jettamil

இந்தியாவுடன் பேசி பலாலிக்கு விமானத்தை கொண்டு வாருங்கள்

Share

இந்தியாவுடன் கலந்துரையாடி பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், அவர்  குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற  விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“பலாலி விமான நிலையத்திற்கு பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம்.

விரைவில் அதனை திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன.

ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை. விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள்.

அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு, இந்தியாவின் இந்தியன் எயர்லைன்ஸ் மற்றும் இண்டிக்கோ ஆகிய நிறுவனங்கள்  விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை.

பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் பேசி  விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள்.

முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள்.

நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் இந்தியத் தரப்பில் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை