தமிழர் தாயகத்தை விட்டுக் கொடுக்க முடியாது! – சாணக்கியன் எம்.பி. வலியுறுத்து!
கலகொட அத்தே ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்குத் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரர் அண்மையில் திருகோணமலைக்குச் சென்று, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு, பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்குத் தடையாக இருக்கும் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சாணக்கியன் எம்.பி. இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
சாணக்கியன் எம்.பி.யின் உறுதிமொழி:
“எமது தமிழர் தாயகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
“இந்தச் செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம்.”
“அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசு, ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.





