இனப் பிரச்சினைக்குத் தீர்வு தேடும் பொறிமுறை ஜனவரியில் ஆரம்பம்! – தமிழரசுத் தலைவர்களிடம் ஜனாதிபதி அநுர உறுதி!
நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை, புதிய ஆண்டு பிறந்ததும் ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரிடம் இன்று பிற்பகல் உறுதி அளித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
சந்திப்பு குறித்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
- அரசியல் தீர்வு மற்றும் அரசமைப்பு:
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
அவர் அடுத்த ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற முறையில் தொடர்ந்து இந்த விடயங்களை எங்களுடன் கலந்துரையாடி முன்னெடுப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
- தேர்தல்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு:
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த உறுதிமொழியில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி, 50 வீதம் நடைமுறைப்படுத்தி விட்டதாக ஜனாதிபதி கூறினார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குச் சொற்ப காலம் தேவைப்படுவதாகக் கூறிய அவர், நிச்சயம் நடத்துவோம் என்ற உறுதிமொழியைத் தந்தார் (ஆனால் எப்போது எனக் குறிப்பிடவில்லை).
மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறித்து எடுக்கப்படக்கூடாது, பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தோம்.
- அரசியல் கைதிகள் விடுதலை:
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘அரசியல் கைதிகள்’ என்ற சொற்றொடர் இருந்ததை அவருக்கே சுட்டிக்காட்டினோம்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் 8 அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கேட்டோம். அது குறித்துத் தான் அவதானம் செலுத்துவார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்:
திருகோணமலையில் குளிர்பானம் விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற நீதிமன்ற உத்தரவு இருந்த போது, அதனைத் தடுப்பதற்காகப் புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டினோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
திரியாயில் இரண்டே இரண்டு பௌத்தர்கள்தான் இருக்கும்போது இரண்டு விகாரைகள் கட்டப்படுவது, குச்சவெளியில் 38 விகாரைகள் புதிதாகக் கட்டப்படுவது போன்ற தேவையில்லாத ஆதிக்கத்தை நிலைநாட்டப் பயன்படும் செயற்பாடுகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினோம்.
பிக்குமார் சிலர் இந்தச் சம்பவத்தை இனவாதத்தைக் கிளப்புவதற்கு ஊதிப் பெருப்பிக்க நடவடிக்கை எடுக்கின்றார்கள். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது எங்களது திடமான கருத்து எனவும் வலியுறுத்தப்பட்டது – என்றார்.





