கோப்பாயில் பயங்கரம்: பேருந்து நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த வாகனம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட நீர்வேலி பகுதியில், கப் (Cab) ரக வாகனம் ஒன்று பேருந்து தரிப்பு நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு (12.01.2026) யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிவேகமாகச் சென்ற கப் ரக வாகனம், நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப்பகுதியில் திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியோரத்தில் இருந்த பேருந்து தரிப்பு நிலையத்தின் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இதில் பேருந்து நிலையக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து நடந்த சமயம் வாகனத்தில் பயணித்தவர்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இன்று காலை விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்ட கோப்பாய் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரம் என்பதால் பேருந்து தரிப்பு நிலையத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.








