தாஜுதீன் படுகொலை: சி.சி.டி.வி. ஆதாரத்தின் மூலம் முக்கிய சாட்சியம் உறுதி!
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை வழக்கில், முக்கிய சந்தேக நபர்கள் அடங்கிய குழுவில் சமீபத்தில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’ என்பவரும் இருந்ததாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் மினுர செனரத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில், கஜ்ஜாவின் மனைவி, சி.சி.டி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு, தாஜுதீனைப் பின்தொடர்ந்த குழுவில் தனது கணவர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
படுகொலை வழக்கில் பின்னணி
2012 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி அதிகாலையில் நாரஹேன்பிட்டிய பார்க் வீதி அருகே தாஜுதீனின் கார் விபத்துக்குள்ளானது என ஆரம்பத்தில் காவல்துறை அறிக்கையிட்டது. அப்போது இது விபத்தால் ஏற்பட்ட மரணம் எனக் கூறி விசாரணைகள் முடிக்கப்பட்டன.
பின்னர், 2015 ஆம் ஆண்டு அப்போதைய காவல்துறைமா அதிபர் என்.கே.இளங்ககோன், இந்த விவகாரத்தை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைத்தார்.
CID விசாரணையில் கிடைத்த முக்கிய முடிவுகள்:
முதல் பிரேதப் பரிசோதனையில் சந்தேகம் இருந்ததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் தாஜுதீனின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, இரண்டாவது பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது பரிசோதனையில், தாஜுதீனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த மரணம் விபத்தல்ல, அது மனிதக் கொலை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, CID விரிவான விசாரணைகளை மேற்கொண்டது.
கஜ்ஜாவின் மனைவி அளித்த வாக்குமூலம்
தாஜுதீனின் காரைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரின் சி.சி.டி.வி. காணொளிப் பதிவுகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்தனர். இந்த காரில் ஏறிய ஒரு நபரின் உருவப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும், அந்த நபர் யார் என்று அடையாளம் காணப்படாமல் இருந்தது.
சமீபத்தில் இந்தோனேசியாவில் இருந்து பாதாள குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெக்கோ சமன் என்பவரும் அடங்குவார். பெக்கோ சமன், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட அருண சாந்த என்ற ‘கஜ்ஜா’ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்.
இந்தச் சூழலில், கஜ்ஜாவின் மனைவி தாமாக முன்வந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் ஒரு யூடியூப் நேர்காணலில் கஜ்ஜா தாஜுதீன் படுகொலை குறித்து சில விடயங்களை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
CID அதிகாரிகள் கஜ்ஜாவின் மனைவியிடம், தாஜுதீனின் காரைப் பின்தொடர்ந்து சென்ற சி.சி.டி.வி. காணொளியைக் காண்பித்தபோது, அதில் இருந்த நபர் தனது கணவர் கஜ்ஜாவே என்று அவரது மனைவி உடல் இலட்சணங்களை அடிப்படையாகக் கொண்டு உறுதியாகக் கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கில் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் மினுர செனரத் மேலும் தெரிவித்தார்.





