வெள்ளத்தில் பல உயிர்களைக் காப்பாற்றிய ‘களனி ராணி’ இளம் யுவதி திடீர் உயிரிழப்பு!
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது, பலரின் உயிர்களைக் காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 11, 2025) திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த யுவதியின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த, ‘களனி கங்கையின் ராணி’ என முடிசூட்டப்பட்ட ஓஷாதி வியாமா என்பவரே உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த இவருக்கு வயது 19.
சமீபத்திய வெள்ளத்தின் போது, இடம்பெயர்ந்த தனது அயல் வீட்டு மக்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்லவும், ஓஷாதி இரவு பகலாகப் படகில் பணியாற்றிப் பெரிய தியாகத்தைச் செய்ததாக உள்ளூர்வாசிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்ட ஓஷாதி, 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீற்றர் நீந்தி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இவ்வாறு சேவை செய்த இளம் யுவதியான ஓஷாதி வியாமா அவர்களின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





