தமிழர் பகுதியில் ஆடை வர்த்தக நிலைய ஊழியர்களிடையே கடும் மோதல்: 3 பேர் படுகாயம்!
மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியில், வாடிக்கையாளர்களைத் தங்கள் கடைக்கு அழைக்கும் விடயத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக, இரண்டு ஆடை விற்பனை நிலையங்களின் ஊழியர்களிடையே கடும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கூரிய ஆயுதத் தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு, கோட்டைமுனைப் பாலத்துக்கு அருகில் அருகருகே அமைந்துள்ள இரண்டு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள், வீதியால் செல்வோரைத் தமது கடைக்கு வருமாறு போட்டி போட்டுக்கொண்டு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 15) பகல், வாடிக்கையாளர்களை அழைக்கும் போது இரு கடைகளுக்கும் இடையேயும் முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், இரு பகுதியினரையும் சேர்ந்த மூன்று ஊழியர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை (ஒக்டோபர் 16) ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் ஆடை வர்த்தக நிலைய ஊழியர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





